Thursday, May 22, 2008

சண்டை

சண்டை போட்டோம் இனிதிட்ட
ஓரொழுத்தும் மிச்சம் வைக்காமல்.
தடாலென்று சாத்திய கதவுகளும்
வெப்பமூச்சுகளில் பறந்த பாத்திரங்களும்.
உண்ணமறுத்ததும் முதுகையே போர்க்கொடியாய்
காட்டிப் படுத்ததும் வெட்டிப்பேச்செதற்கு?
கிடைப்பாளா... கேளுங்கள் இத்தனைத் தீவிரமாய்-இந்த
மரமண்டையை காதலிக்க
ஒரு பைத்தியம்!!

Tuesday, May 20, 2008

ஆழம்

வெளியே எடுக்க முயன்றபொழுதுதான் தெரிந்தது...
எவ்வளவு ஆழம் நீ உள்ளே சென்றிருக்கிறாயென்று!

Monday, May 19, 2008

பெயர் என்ன?

இரு எழுத்து கொண்ட ஒரு பெயரின் முன் ஒர் எழுத்தை சேர்த்தால் வேறு பெயரும் அந்த மூன்றொழுத்துகளையும் மாற்றாமல் அதன் முன் மற்றும் ஒரு எழுத்தை சேர்த்தால் வேறு பெயரும் வரும் அந்த பெயர் என்ன?

வாழ்கை

வாழ்கை என்பது போராட்டம் வாழ்ந்து காட்டு!
வாழ்கை என்பது பூங்காவகம் சந்தோஷமாயிரு!
வாழ்கை என்பது பாலைவனம் மனந்தளராதே!
வாழ்கை என்பது மலர்தூவிய படுக்கை அனுபவி-ஆனால்
வாழ்கை என்பது ஒரு கட்டுப்பாடானது
எல்லையை மீறி விடாதே!

உதடுகள்

விடுதலை பெற்றபின்னும்
சிறைசெல்ல துடித்தன
என் உதடுகள்!

கோபம்

உன்னைக் காணும்வரை
உறுதியாயிறுக்கிறேன்
தாமதமாய் வந்தததிற்க்காக
உன்னைப்பார்த்து
திட்டவேண்டுமென்று-ஆனால்
உன்னைப் பார்த்ததும்
பேசவேமுடியவில்லையே
பிறகெங்கே திட்டுவது...

மழை

உன்னை நனைத்த மழை
எனை நனைக்கும்போது சொன்னது
நான் மழையாய் வரவில்லை
காதலை நனைத்துவிட்டு
காதலாய் வந்திருக்கிறேன்.

Sunday, May 18, 2008

வலி

முடியும் என்று சொல்லி-நீ
பேசாமலிருந்த அந்த பத்து நாட்களின்
வலி எங்கே தொலைந்தது
பதினோராவது நாள்
முத்தத்தின் போது...!

இழப்பு

உன்னை இழந்து விடுவேன்! ஏனென்றால்
என்னை மகிழ்விக்கும் எதுவும்
வாழ்க்கையில் நிலைத்ததில்லை!!

சென்னைக்கு வந்த ஆஸி. கப்பலில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெய்னரில் ராக்கெட் லாஞ்சர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு, 16 கன்டெய்னர்களில் இரும்பு பொருட்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டன. எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த இந்த கன்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு கன்டெய்னரில் ராக்கெட் லாஞ்சரின் உபயோகப்படுத்தப்பட்ட உதிரிப் பாகங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கன்டெய்னர் அப்படியே மூடி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இதுகுறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்து 100 பேர் பலி

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எண்ணைக்குழாய் வெடித்ததில் 100 பேர் பலியானார்கள். நைஜீரியாவில் பெட்ரோல் அதிக அளவில் கிடைத்து வருகிறது. உலகிலேயே எண்ணை ஏற்றுமதி நாடுகளில் 8-வது நாடாக நைஜீரியா உள்ளது. இதன் பொருளாதார தலைநகராக லாகோஸ் விளங்குகிறது. இங்கு இருந்து உலகின் பல பகுதிகளுக்கும் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணை ஏற்று மதிக்காக லாகோஸ் நகரம் முழுவதும் எண்ணை குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. லாகோஸ்சின் புறநகர் பகுதியில் அலிமோஷோ மாவட்டத்தில் இஜேகன் என்ற கிராமத்தில் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ரோடு என்ஜின் அந்த வழியாக சென்றது. அப்போது தரையில் பதிக்கப்பட்ட எண்ணைக் குழாய்கள் மீது அந்த ரோடு என்ஜின் சென்றதால் குழாய்கள் நசுங்கி வெடித்தன. எண்ணைக் குழாய்கள் திடீர் என்று வெடித்ததால் தீ பிடித்தது. அநத தீ, 500-க்கும் மேற்பட்ட வீடுகளையும், பள்ளிக்கூடங்களையும் சூழ்ந்தது. இதனால் அந்த நகரமே தீ பிடித்து எரிவது போல இருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி செத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏறத்தாழ 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்ததில் 1500 பேர் பலியானார்கள். 2006-ம் ஆண்டு இதே லாகோஸ் நகரில் எண்ணைக் குழாயில் தீப்பிடித்ததில் 250பேர் பலியானார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணைக்குழாயை உடைத்து பெட்ரோல் திருடியதில் குழாய் வெடித்தது. இதில் 45 பேர் பலியானார்கள்

Saturday, May 17, 2008

அழகு

முத்தமிடுவதை விட அழகு-நீ
முத்தம் கேட்பது

பொழுது

அன்பே நன்று விடிந்ததா பொழுது என்பாய்
அந்த நொடி வரை என்று வந்தது வெளிச்சம் எனக்கு!

தமிழ்பெண்

நீ பேசுவதால் தமிழ் மேலும் தித்திக்கிறதா-இல்லை
தமிழ் பேசுவதால் நீ இன்னும் தித்திக்கின்றாயா?

உனக்குள்

தொலைந்தே விட்டதோ என்று
இரவு முழுவதும் அழுதழுது உறங்கிப் போன மழலை
காலையில் கண் விழித்ததும்
தளையணை மேல் தன் பிரிய பொம்மையை கண்டு
மார்போடு அள்ளி அணைத்து
முத்த மழை பொழிந்து ஆனந்தக் கண்ணீரினால்
நினைத்து உள்ளம் நொகிழ்வதைப் போல்
ஒவ்வொரு முறையும் உன்னை விலகிபின் கூடும் பொழுதுகளில்
உன்னுள் புகுந்து எனதுயிர் மீள்கின்றேன் அன்பே!!

மியான்மார் புயலில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆலிவுட் நடிகர்கள் உதவி

மியான்மார் நாட்டை தாக்கிய நர்கிஸ் புயலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்கு ஆலிவுட் சினிமா நட்சத்திரங்கள் முன்வந்து இருக்கிறார்கள். அவர்கள் 2 கோடி ரூபாய் திரட்டி கொடுக்கிறார்கள். சென்னையை மிரட்டிய நர்கிஸ் புயல், மியான்மார் நாட்டை சமீபத்தில் தாக்கியது. இந்த புயலுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பல லட்சம் பேர் காயம் அடைந்தனர். மேலும் 12 லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து தவிக்கிறார்கள். வீடுகள் இடிந்து விழுந்து விட்டதால் அவர்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமலும், உண்பதற்கு உணவு இல்லாமலும் தவிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். பல லட்சக்கணக்கான சிறுவர்கள் அனாதைகளாகி விட்டனர். தாய் தந்தையை இழந்து அவர்கள் ஆதரிப்பார் யாரும் இல்லாமலும், தங்குவதற்கு இடம் இல்லாமலும், பசி பட்டினியோடும், நோயோடும் அவர்கள் வாழும் நிலை பரிதாபமாக உள்ளது. சிறுவர்களுக்கு உதவுவதற்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட் ஆன் அவர் வாட்ச் என்ற சமூக சேவை இயக்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இயக்கத்தை ஆலிவுட் நடிகர்களான ஜார்ஜ் குளூனி, பிராட் பிட், டான் செடில், மாட் டமோன் ஆகியோர் தான் உருவாக்கி பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.ஆலிவுட் நடிகர்கள் மியான்மார் நாட்டு சிறுவர்களுக்கு உதவுவதற்கு ஆலிவுட் நடிகர்களின் இயக்கம் முன்வந்து உள்ளது. நடிகர்கள் முதல் கட்டமாக ரூ.2 கோடி திரட்டி கொடுத்து உள்ளனர். மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.மியான்மார் சிறுவர்களின் மருத்துவத்துக்கும், உணவுக்கும், நிவாரணத்துக்கும் இந்த நிதி செலவிடப்படும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் அலெக்ஸ் வாக்னர் தெரிவித்தார்.

Friday, May 16, 2008

விளையாட்டு

விளையாடியது போதும்
இனியாவது நிறுத்து
தொலைபேசியில் நான்
ஹலோ சொல்லியும் நீடிக்கும்
அந்த ஐந்து வினாடி
மொனவிளையாட்டை

இளம் நட்சத்திரத்தின் வெடிப்பு அமெரிக்க விஞ்ஞானிகளால் அவதானிப்பு


அண்டவெளியில் 140 வருட கால வயதான இளம் நட்சத்திரமொன்றின் வெடித்துச் சிதறும் நிகழ்வை அவதானித்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுவரை அவதானிக்கப்பட்ட நட்சத்திர வெடிப்பு சம்பவங்களில் மிகவும் இளைய நட்சத்திரமொன்றின் வெடிப்பாக இது கருதப்படுகிறது. இந்த நிகழ்வானது நியூ மெக்ஸிகோவிலுள்ள வானொலி சமிஞ்சை அவதான நிலையம் மற்றும் விண்வெளியில் வலம் வரும் நாசாவின் சந்திரா எக்ஸ் ரே அவதான நிலையம் என்பனவற்றின் மூலம் அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேற்படி நட்சத்திர வெடிப்பு 1868 ஆண்டளவில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அதன் ஒளி தற்போதே பூமியை வந்தடைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Thursday, May 15, 2008

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட காதலால் தங்கச்சங்கிலி திருட்டு

பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட காதலால் தனது 15ஆயிரம் பெறுமதியான தங்க சங்கிலியை காதலனிடம் பறிகொடுத்த யுவதி இதுதொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் இருவரும் அருகே அமர்ந்து பயணம் செய்த போது இருவருக்குமிடையில் காதல் ஏற்ப்பட்டது பின்னர் கையடக்க தொலைபேசி மூலம் உரையாடி வந்தனர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த இந்த யுவதியும் காலியைச் சேர்ந்த இளைஞனும் சில தினங்களுக்கு முன்னர் காலியில் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து திரையரங்கில் படம் பார்த்தனர் யுவதி வீட்டுக்கு வந்து பார்த்த போது கழுத்தில் இருந்த தங்கசங்கிலி காணாமல் போனதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இந்த யுவதிக்கு அந்த இளைஞன் கொடுத்த முகவரி தவறானது எனவும் அப்படியானவர் இம்முகவரியில் இல்லையெனவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வருகிறது.

இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் ஒலிம்பிக் தீபம்


யானைக்கு முன்னே மணியோசை வருவதுபோல உலகமெங்குமிருந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முன்பு, ஒலிம்பிக் தீபம் உலகமெங்கும் சுற்றி வருகிறது. திபெத் விவகாரத்தால் இந்தத் தீப உலா ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்க வேண்டியிருப்பது தனிக்கதை. இதுவரை எந்த ஒலிம்பிக்ஸக்கும் இல்லாத சிறப்பு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸக்கு உண்டு. ஒலிம்பிக் தீபம் இந்த முறை க்வோமோலாங்மா சிகரத்துக்குக் கொண்டு போகப்படுவது தான் அது. எந்தப் பருவநிலையையும் தாங்கும் சக்தியுடன் ஒலிம்பிக் தீபம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் எவ்வளவு பயங்கரப் பனிப்புயல் அடித்தாலும், வெப்பநிலை எவ்வளவு பாதாளத்துக்குப் போனாலும், காற்றில் பிராணவாயு மிகக் குறைவாக இருந்தபோதும் தீபத்தின் ஜூவாலை மட்டும் கொஞ்சம்கூட மங்காது. அணைந்து போகாது. அப்படிப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பத்தில் ஒலிம்பிக் டார்ச்சை உருவாக்கி இருக்கிறோமாக்கும்’ என்று “சைனா ஏரோஸ்பேஸ் சயன்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்’ மார்தட்டிக் கொள்கிறது.
அந்தச் சிகரத்தின்மீது ஏறுபவர்கள் தோள்களில் சுமந்து செல்லும் பல்வேறு அதி நவீன சுவாச சாதனங்கள் உதவி செய்தாலும் தடுமாறுகிறவர்கள் பலபேர். ஆனால் இந்த ஜோதி தடுமாறாது என்று நம்புகிறார்கள்.
இந்தச் சிகரத்தில் வெப்பநிலை பொதுவாக எவ்வளவு தெரியுமா! மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்!
எந்த நிலையிலும் தீபத்தின் வெளிச்சத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும் என்று சவால் விட்டிருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
அதுமட்டுமல்ல, அவர்களின் இன்னொரு சவால் இதுவரை யாரும் விடாத சவால்:
“”நாளைக்கே க்வோமோலாஸ்மா சிகரம் இருநூறு மீட்டர் உயரமாக வளர்ந்து விடுகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அதன் உச்சியிலும் எங்கள் ஒலிம்பிக் தீபம் ஒளி உமிழும். சேலன்ச்?”
அதுசரி, க்வோமோலாங்மா என்று ஒரு சிகரமா? கேள்விப்பட்டதில்லையே என்று குழம்ப வேண்டாம்.
எவரெஸ்ட் சிகரத்தை சீனாவில் க்வோமோலாங்கா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர்




மலையாளத்திலிருந்து இன்னொரு அழகிய மலர், தமிழ் திரைத் தோட்டத்திற்கு வந்துள்ளது. பெயர் பூர்ணா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நாயகிகளின் பட்டியல் மிகப் பெரியது. அந்த வரிசையில் புதிதாக வந்து இணைந்துள்ளார் பூர்ணா. பூர்ணாவின் இயற்பெயர் ஷம்னா. மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு கொடைக்கானல் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். கவர்ச்சிகரமான உடல் வாகுடன் உள்ள பூர்ணாவுக்கு மற்ற மலையாள நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவிலான அபரிமிதமான வரவேற்பு தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளதாம். டி.கே.போஸ் இயக்கும் கொடைக்கானலில் பூர்ணாதான் ஹீரோயின். படத்தில் நடிகையாகவே இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரமாதமாக நடித்து பிரளயத்தைக் கிளப்பப் போவதாக கூறுகிறார் பூர்ணா. படத்தில் திலக், சேகர் என இரு ஹீரோக்கள். இருவருமே புதுமுகம். இதுதவிர மலேசியாவைச் ேசர்ந்த காண்டீபன் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் மலேசியாவில் டிவி படங்களில் பிரபல நடிகராம்.
கொடைக்கானல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். கொடைக்கானலில் நடக்கும் ஒரு கொலையைச் சுற்றிப் படம் நகருகிறது. திரில், திகில் தவிர கிளாமரும் படத்தில் நிறையவே இருக்குமாம். அதற்கு பூர்ணா சிறப்பாக பொருந்தி வருவார் என்பதால்தான் அவரைத் தேர்வு செய்தனாரம்.
கவர்ச்சிகரமாக இருக்கும் பூர்ணா, நடனத்தில் சூரப்புலியாம். மலையாளத்து அம்ரிதா டிவி நடத்திய டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளாராம்.
நயனதாரா, மீரா ஜாஸ்மின், ஆசின் வரிசையில் தனக்கும் இடம் கிடைக்க ரசிகர்கள் தயவு செய்யட்டும் என்ற நம்பிக்கையுடன் கொடைக்கானல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பூர்ணா.

மிஸ் சின்னத்திரை-2008: நடிகை ரியா தேர்வு





சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திறமை காட்டிவரும் இளம் நடிகைகளில் பலவகையிலும் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் காட்டுவதற்காக, சின்னத் திரை நடிகர் விஷ்வா உருவாக்கிய நிகழ்ச்சிதான் மிஸ் சின்னத்திரைப் போட்டி. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆண்டு தோறும் இப்போட்டியை நடத்துவதாக அறிவித்திருந்தார் விஷ்வா. அதன்படி 2008-ம் ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரைப் போட்டி சென்னை லாமிக்கேல் கிளப்பில் 11ம் தேதி இரவு நடந்தது. கண்கவரும் நடன நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இப்போடியில் சின்னத்திரையில் பிரபலமாகத் திகழும் மது, ஆர்த்தி, தாரிகா, ஸ்வேதா, தீபா, ஜூலி, ரியா, அனிஷா, காவ்யா மற்றும் அபர்ணா ஆகிய பத்து நடிகைகள் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். இதில் நடுவர்களாக பிரபல நடிகைகள் சங்கீதா, அஞ்சலி, இயக்குநர்கள் மாதேஷ், கோலங்கள் திருச்செல்வம், கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை பட்டம் வென்ற சந்தோஷி மற்றும் மாடல் அழகி காவ்யா ஆகியோர் பங்கேற்றனர். முதல் சுற்று புடவை அணிந்த அழகிகளின் அணிவகுப்பு நடந்தது. பின்னர் தனித் திறமைச் சுற்று நடைபெற்றது. இதில் அழகிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஆடல், பாடல் மற்றும் இதர திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒரு தேர்ந்த காராத்தே வீரரைப்போல நடிகை தாரிகா சிமெண்ட் பலகைகளை உடைத்து பரபரப்பேற்படுத்தினார். மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் மேற்கத்திய நாகரிக உடையணிந்து நடைபோட்டனர்.
இறுதியில் நடிகைகளின் அறிவுத் திறனைச் சோதிக்கும் சுற்று. இதில் நடுவராக வந்திருந்த இயக்குநர் மாதேஷ் அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன் வைத்தார். ‘பெண்மையின் இலக்கணம் என்ன?” என்ற அவரது கேள்விக்கு பத்துபேரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக, அடக்கம், பொறுமை, தாய்மை, நாணம்(!), காதலில் உறுதி என்று சொல்லிவைத்த மாதிரி பதில் கூறினர்.
இறுதியில் மிஸ் சின்னத்திரை 2008-ஆக ரியா தேர்வு செய்யப்பட்டார். தாரிகா இரண்டாமிடத்தையும், அனிஷா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
மேலும் தாரிகாவுக்கு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அழகி எனும் விருதும் வழங்கப்பட்டது. இதைத் தவிர நடிகை மதுவுக்கு சிறந்த உடல் அழகி பட்டமும், ஸ்வேதாவுக்கு சிறந்த கண்ணழகி விருதும், தீபாவுக்கு சிறந்த பூனைநடை (அதாங்க கேட்வாக்!) அழகி விருதும், ஜூலிக்கு சிறந்த சரும அழகி விருதும், காவ்யாவுக்கு சிறந்த சிரிப்பழகி விருதும் வழங்கப்பட்டது.
விஜய் ஆதிராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் சிறப்பாக இருந்தது. பிரபல பின்னணிப் பாடகி மஹதி, நடிகைகள் ப்ரியதர்ஷினி, நீபா, டிங்கு ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். விஷன்ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது

வருகைக்கு நன்றி!!!