Thursday, May 15, 2008

இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் ஒலிம்பிக் தீபம்


யானைக்கு முன்னே மணியோசை வருவதுபோல உலகமெங்குமிருந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முன்பு, ஒலிம்பிக் தீபம் உலகமெங்கும் சுற்றி வருகிறது. திபெத் விவகாரத்தால் இந்தத் தீப உலா ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்க வேண்டியிருப்பது தனிக்கதை. இதுவரை எந்த ஒலிம்பிக்ஸக்கும் இல்லாத சிறப்பு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸக்கு உண்டு. ஒலிம்பிக் தீபம் இந்த முறை க்வோமோலாங்மா சிகரத்துக்குக் கொண்டு போகப்படுவது தான் அது. எந்தப் பருவநிலையையும் தாங்கும் சக்தியுடன் ஒலிம்பிக் தீபம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இமயமலைச் சிகரமான க்வோமோலாங்மாவில் எவ்வளவு பயங்கரப் பனிப்புயல் அடித்தாலும், வெப்பநிலை எவ்வளவு பாதாளத்துக்குப் போனாலும், காற்றில் பிராணவாயு மிகக் குறைவாக இருந்தபோதும் தீபத்தின் ஜூவாலை மட்டும் கொஞ்சம்கூட மங்காது. அணைந்து போகாது. அப்படிப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பத்தில் ஒலிம்பிக் டார்ச்சை உருவாக்கி இருக்கிறோமாக்கும்’ என்று “சைனா ஏரோஸ்பேஸ் சயன்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்’ மார்தட்டிக் கொள்கிறது.
அந்தச் சிகரத்தின்மீது ஏறுபவர்கள் தோள்களில் சுமந்து செல்லும் பல்வேறு அதி நவீன சுவாச சாதனங்கள் உதவி செய்தாலும் தடுமாறுகிறவர்கள் பலபேர். ஆனால் இந்த ஜோதி தடுமாறாது என்று நம்புகிறார்கள்.
இந்தச் சிகரத்தில் வெப்பநிலை பொதுவாக எவ்வளவு தெரியுமா! மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்!
எந்த நிலையிலும் தீபத்தின் வெளிச்சத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும் என்று சவால் விட்டிருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
அதுமட்டுமல்ல, அவர்களின் இன்னொரு சவால் இதுவரை யாரும் விடாத சவால்:
“”நாளைக்கே க்வோமோலாஸ்மா சிகரம் இருநூறு மீட்டர் உயரமாக வளர்ந்து விடுகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அதன் உச்சியிலும் எங்கள் ஒலிம்பிக் தீபம் ஒளி உமிழும். சேலன்ச்?”
அதுசரி, க்வோமோலாங்மா என்று ஒரு சிகரமா? கேள்விப்பட்டதில்லையே என்று குழம்ப வேண்டாம்.
எவரெஸ்ட் சிகரத்தை சீனாவில் க்வோமோலாங்கா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!